மிட்டாய் கவிதைகள்!

பொங்கல் எப்போதும் இப்போதும்!

July 20, 2013

pongal

முதலாம் நாள் !
பழையன கழித்து புதியன புகுத்தும்
போகித் திருநாளாம் நாளொன்றில்
கழிக்கும் பழையனவே
பலருக்குப் புதிதாயினும்
கரும்புகையைக் கிளப்பிவிட்டு
பகைபல தேடும் பயங்கரம்!

இரண்டாம் நாள் !
பொங்கல் பானை ஒன்று
புத்தாடை உடுத்தி வந்து
பற்றவைத்த அடுப்பின் மேலே
புன்னகை பொங்க வைக்கும்,

வெள்ளமாய்ப் பொங்கிய வெண்கழுநீரோடு
வெல்லத்தை அள்ளிக் கொட்டி
வானத்து வந்தோனை வணங்கி
வீரமாய் விளையாடச் சென்று
வலு சேர்ப்பார் பல்லுக்கு
களிப்போடு கரும் புண்டு!

இப்போதோ
இருவிழிகள் எழுந்தது முதலே
இருபத்து ஈரங்குல பெட்டி யொன்றில்
தமிழ்தெரியா நடிகனின் பேச்சைக் கண்டு
களிக்கவில்லை காலம் கழிக்கிறோம்!

மூன்றாம் நாள் !
வயல் மேலே நடை பழகி
வயிற்றை நிரப்பும் மாட்டின் கொம்பில்
வண்ணக் கலவையில் வாகை சூடி
வணக்கம் சொல்வார் மதித்தோ ரங்கே,

ஜல்லிக் கட்டில் மல்லுக் கட்டிய
காளையும் காளையும்
கள்ளிக் காட்டில் காதைப் பிளக்கும்
கபடி கபடியும்
காணாமல் போனதோ??

அணிதிரளும் காளையும் உண்டு
அடக்கும் திறமையும் உண்டு
ஆனால்
அதற்கும் மேலே சட்டங்கள் பலஉண்டு!

விளைச்சலின்றி காடும் காலியாத் தானிருக்கு
விளையாடும் ஆசையும் இருக்கு
விளையாடினால் வெட்டிப் பையன் என்ற
விண்தொடும் பெயரே பரிசு!

நான்காம் நாள் !
பெற்றோர்கள் தெரிந்த பெரியோர்கள்
பாதங்களை வணங்கி நின்று
பெயர் பெருக என வாழ்த்தி
பாராட்டப் பெறும் நாளிது!

பகல் வேந்தன் தூங்கும் நேரம்
கைநோகப் பிழிந்த முறுக்கை
பை நிறைய அள்ளி வந்து,
பொதுவாக நடுவே வைத்து
பெண்க ளெல்லாம் ஆடிப்பாடி
பகிர்ந்துண்ணும் ஊர் முழுதும்
பூப்பறிக்க செல்வார் அப்போது!

இங்கேயோ
காலில் விழுகிறோம் வாழ்த்துக்களுக்காகல்ல
கூடுதலாகக் காசைக் கொஞ்சம் பார்க்க!
விடுமுறையின் கடைசி நாளென்று நினைத்தே
விடை கொடுத்து விடுகிறோம்
விருந்தோம்பலுக்கும் விருந்திற்க்கும்!

பெயர் மட்டும்தான் பொங்கல் விடுமுறை
பொங்கல் வைக்கலாம் வந்து பாரென்றால்
போங்கள் வரவில்லை என்ற
பதிலே மிஞ்சும் நிலை!
பாரம்பரியம் கலாச்சாரம் எங்கே இங்கே?


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்